இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் டெண்டுல்கர் 39, தன் ஓய்வு குறித்து பேட்டியளித்துள்ளார்.
கடந்த 1989ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான சச்சின், 23 ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடி வருகிறார்.
189 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,489 ஓட்டங்களும் 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.
இது தவிர டெஸ்டில் 51 சதமும், ஒரு நாள் போட்டியில் 49 சதமும் அடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்த லட்சுமண், டிராவிட் ஓய்வு பெற்றனர்.
இதனால் 39 வயதான டெண்டுல்கருக்கு ஓய்வுபெற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதற்கு ஏற்றவாறு நியூசிலாந்துக்கெதிரான முதல் டெஸ்டில் 19 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.
இதற்கிடையே தற்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்றும், உடல் தகுதியுடன் இருக்கும் வரை ஆடுவேன் எனவும் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: தற்போது நல்ல உடல் தகுதியுடன் உள்ளதாகவும் ரசித்து விளையாடி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் என்னால் எவ்வளவு காலம் விளையாட முடியுமோ அதுவரை விளையாடுவேன் என்றார்.
இதனால் இப்போது ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை. மேலும் அணியில் மூத்த வீரராக இருப்பதால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.