தொடர் ஆய்வுகளின் மூலம், 2014ம் ஆண்டுக்குள் முழுமையான, செயற்கை கண் தயாராகும் என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அறுவை சிகிச்சை:ஆஸ்திரேலியாவின், விக்டோரியா மாகாணத்தில், கிழக்கு
மெல்போர்னில் உள்ள, ராயல் விக்டோரியன் கண் மற்றும் காது மருத்துவமனையில்,
டேனி ஆஷ்வொர்த், 54, என்ற பார்வைத் திறனற்ற பெண்ணுக்கு முதல் முறையாக
செயற்கைக் கண், கடந்த மே மாதம் பொருத்தப்பட்டது. மெல்போர்ன், பையோனிக்ஸ்
இன்ஸ்டிடியூட்டில் நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, கடந்த
மாதம் கருவி, ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டது. இதன் பிறகு, ஆஷ்வொர்த்துக்கு,
பிம்பங்களை முழுமையாக பார்க்கும் திறன் கிடைத்து விட்டதாக,
ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும், சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகை
செய்தி வெளியிட்டுள்ளது.
தனது அனுபவம் குறித்து, ஆஷ்வொர்த் கூறுகையில், திடீரென ஒளிக்கற்றைகள்
கண் முன் தோன்றின. பலப்பல வடிவங்கள் கண்ணுக்கு முன் தோன்றுகின்றன. ஒவ்வொரு
முறையும் மூளையில் வித்தியாசமான தூண்டல்களை உணருகிறேன், என்றார்.
ஆஷ்வொர்த் கூறும் பல்வேறு அம்சங்களை ஆய்வாளர்கள் பதிவு செய்து
வருகின்றனர். இத்தகவல்களின் அடிப்படையில், காட்சி பிம்பங்களை முழுமையாக
கிரகிக்கும் வகையில் செயற்கை கண் கருவியை மேம்படுத்தும் பணியில்
ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
போட்டோ ரிசெப்டார்:பையோனிக்ஸ் இன்ஸ்டிடியூட் இயக்குனர் ராப்
ஷெப்பர்டு கூறுகையில், ஆஷ்வொர்த் என்ன பார்க்கிறார் என்பதை துல்லியமாக
தெரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். விழித்திரையில் காட்சிகள் படும் போது,
என்ன விதமான தூண்டுதல் கிடைக்கிறது என்பதையும் நுணுக்கமாக பதிவு செய்து
வருகிறோம்.காட்சிகளில் தெரியும் வடிவம், ஒளியின் பொலிவு, அளவு போன்றவை
விழித்திரையில் படும்போது, மூளைக்கு கிடைக்கும் தகவல்கள் குறித்தும்
ஆராயப்படுகிறது. 2013 அல்லது 2014ம் ஆண்டுக்குள் செயற்கைக் கண்
தொழில்நுட்பம் முழுமை பெறும் என நம்புகிறோம், என்றார்.பொதுவாக கண்கள்
பார்க்கும் பிம்பங்களின் தகவல்கள், விழித் திரையில் உள்ள, போட்டோ
ரிசெப்டார் எனும், உயிரணுக்கள் மூலம் சேகரிக்கப்படும்.
உயிரியல் நிகழ்வு:அவை சமிக்ஞைகளாக மூளைக்குச் சென்று, மூளையில் உள்ள
காங்க்ளியான் உயிரணுக்கள் மூலம் தகவல்கள் புரிந்து கொள்ளப்படும். இயல்பான
கண் பார்வைக்கு தேவையான அடிப்படை உயிரியல் நிகழ்வு இதுவே.ஆனால்,
விழித்திரை சேதமடைவது உள்ளிட்ட காரணங்களால், கண் பார்வை இழப்பு அல்லது
பாதிப்பு ஏற்படும். இதனால், பிம்பங்களின் தகவல் சேகரிப்பு மற்றும்
மூளைக்கு கடத்தும் இயக்கம் தடைபடும்.
சோதனை நிலை:பிரத்யேக கருவிகளின் மூலம், இந்நிகழ்வுகளை செயற்கையாக
மேற்கொள்ளும் முயற்சியே, செயற்கை கண் தொழில்நுட்பத்தின் அடிப்படையாக
உள்ளது.
தற்போது சோதனை கட்டத்தில் உள்ள செயற்கை கண் தொழில் நுட்பத்தால்,
பிரகாசமான வெளிச்சம் மற்றும் கோடுகளை மட்டுமே பார்க்க முடிகிறது. தொடர்
ஆய்வுகளின் மூலம், 2014ம் ஆண்டுக்குள் முழுமையான செயற்கை கண் தயாராகும்
என, பையோனிக்ஸ் இன்ஸ்டிடியூட் இயக்குனர் ராப் ஷெப்பர்டு நம்பிக்கை
தெரிவித்து உள்ளார்.