>

தாண்டவம் – திரை விமர்சனம்


தெய்வத் திருமகள் என்ற சுட்ட ஹிட் படம் கொடுத்த இயக்குநர் விஜய்-விக்ரம்-அனுஷ்கா-சந்தானம் கூட்டணியில் வழக்கத்திற்கு மாறான பழி வாங்கும் கதை என்றும், எக்கோ கன்செப்ட்-எக்காத கான்செப்ட் என்றும் பலவாறு விளம்பரப்படுத்தப்பட்டு  இன்று வெளியாகியிருக்கும் படம் தாண்டவம்.
ஒரு ஊர்ல…………………:
கண் பார்வையற்ற, லண்டன் சர்ச்சில் நல்ல பிள்ளையாக பியானோ வாசிக்கும் ஹீரோ, திடீர் திடீர் என சிலரைக் கொல்கிறார். லண்டன் போலீஸில் வேலை செய்யும் நாசர் அதைத் துப்பறிகிறார்.  அந்தக் கொலைகள் ஏன், எதற்கு, எப்படி நடந்தது என்பதே கதை.
திரைக்கதை :
லண்டனில் மிஸ்.இங்கிலாந்து ஆக முயற்சிக்கும் எமி ஜாக்சன், கண் பார்வையற்ற விக்ரமை சந்திக்கிறார். ஒரு எறும்புக்குக் கூட தீங்கு விளைவிக்காத நல்லவரான விக்ரமை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் விக்ரம் அடிக்கடி எங்கோ போய், யாரையாவது கொலை செய்துவிட்டு, மறுநாள் காலையில் பியானோ வாசிப்பைத் தொடர்கிறார். ஒரு பக்கம் எமியின் காதல், மறுபக்கம் லண்டன் போலீஸின் தேடல் என்று போகும்போது, ஃப்ளாஷ்பேக்கில் விக்ரம் ஒரு இந்திய உளவுத்துறையின் முக்கிய அதிகாரி என்றும், அனுஷ்காவை மணந்த புதுமாப்பிள்ளை என்றும் தெரிகிறது. நாசர், கொலையாளி விக்ரம் தான் என்று கண்டுபிடிப்பதில் முதல்பாதி முடிகிறது.
மெதுவாக நகரும் முதல்பாதிக்கு நேரேதிராக இரண்டாம் பகுதியில் படம் ஃபுல் ஸ்பீடில் பறக்கிறது. இந்திய ராணுவம் தொலைத்த ஒரு விஷயத்தைத் தேடி விக்ரம் லண்டன் வர, அங்கே அவர் வாழ்க்கையே தலைகீழாய் ஆன கதையும், போலீஸீன் பிடியில் சிக்காமலேயே விக்ரம் வில்லன்களை பழி வாங்கும் கதையும் விறுவிறுப்பாக சொல்லப்படுகிறது.
கல்யாணம் ஆனபின்னும் முதலில் ஃப்ரெண்ட்ஸ் ஆகி, பிறகு லவ்வர் ஆகி, அதன்பிறகே மற்றதெல்லாம் எனும் மனைவின் கண்டிசன், எக்கோ கான்செப்ட், சந்தானத்தின் ஒன் லைனர்கள், அழகான லண்டன் மாநகரம், லண்டன் குண்டுவெடிப்பை கதையில் புகுத்திய சாமர்த்தியம் என பல விஷயங்கள் படத்தை ரசிக்க வைக்கின்றன.
விக்ரம் :
பிறவி நடிகனான விக்ரம், இதிலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நம்மை அசத்துகிறார். உளவுத்துறை அதிகாரிக்கும், கண் பார்வையற்றவருக்கும் பாடி லாங்குவேஜில் அவர் காட்டும் வித்தியாசங்கள் அருமை. உடலை கேரக்டருக்கு ஏற்றபடி அவர் மாற்றி இருந்தாலும், ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் முகத்தில் முதுமை தனித்துத் தெரிகிறது. நல்ல நடிகரான விக்ரம் முகத்தைக் கொஞ்சம் கவனிப்பது நல்லது.
ஹீரோயின்ஸ் :
முதல் பாதியில் எமி ஜாக்சன் தான் அதிகக் காட்சிகளில் வருகிறார். ஆங்கிலேயெ முகம் என்பதால், நமக்கு அவர்மேல் பெரிதாக ஈடுபாடு வரவில்லை. (உனக்கு ஏன்யா வரணும்ங்கிறீங்களா?..அதுவும் சரிதான்!). ஆனால் எமி நன்றாக நடிக்கவே செய்கிறார். வெள்ளைக்குதிரை லட்சுமி ராய் இந்தப் படத்தில் இருந்தாலும், நண்பனின் மனைவியாக வருவதால் குத்துப்பாட்டுக்கும் நோ சான்ஸ்..சோ நோ யூஸ்!
எல்லாவற்றுக்கும் சேர்த்து, ஃப்ளாஷ்பேக்கில் அனுஷ்கா வருகிறார். அறிமுகக் காட்சியிலேயே மழையில் நனைந்த அனுஷ்காவைக் காட்டுபோது தியெட்டரே அதிர்கிறது.(உண்மையைச் சொல்லு..தியேட்டரா அதிர்ந்துச்சு?). சிநேகாவும் வாலண்டரி ரிட்டயர்மெண்ட்டில் போய்விட்ட நிலையில், குடும்பப் பாங்கான கேரக்டருக்கு அனுஷ்காவை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?..விக்ரமை போலீஸ் எஸ்.ஐ என்று நினைத்துகொண்டு, அவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கும் காமெடி என்றாலும், லாஜிக் மிஸ்ஸிங்.
சந்தானம் :
டாக்ஸி டிரைவரான சந்தானம், விக்ரம் கொலை செய்யப்போகும்போதெல்லாம் சரியாக வந்து மாட்டிக்கொள்வது நல்ல காமெடி. தெய்வத் திருமகளை அடுத்து இணையும் கூட்டணி என்பதால், சந்தானத்திடம் அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் வரும் காட்சிகளே குறைவு தான் என்பதால், அவர் என்ன செய்வார்? ஆனாலும் கிடைக்கிற கேப்பில் சிக்ஸராக அடித்துத் தள்ளுகிறார். நாசரிடம் எகத்தாளமாகப் பேசுவதும் ரவுசு.
நாசர் / ஜெகபதிபாபு:
முகமூடியில் நரேன் – ஜீவாவை விரட்டிய நாசர், இதில் விக்ரமை விரட்டுகிறார். ஆனாலும் ஈழத்தமிழராக வருவதால், இரு கேரக்டர்களும் ஒன்றாகத் தெரியவில்லை. இந்தப் படத்தில் அவருக்கு மகள் இல்லை என்பதும் ஒரு ஆறுதல். விக்ரமின் உயிருக்குயிரான நண்பனாக ஜெகபதிபாபு வருகிறார். நல்ல நடிப்பு.
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- இடைவேளை வரை மெதுவாகச் செல்லும் திரைக்கதை
- கஜினியில் மெமரி லாஸ், இங்கே பார்வை லாஸ்!..ஹீரோயினும் லாஸ் என சில ஒற்றுமைகள்
-  பாடல்கள்..ஜி.வி.பிரகாஷ் ஏமாற்றிவிட்டார்
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- நல்ல கதையுடன், குடும்பத்துடம் பார்க்கக்கூடிய படமாக எடுத்தது
- விக்ரமின் கவனமான நடிப்பு
- ஹி..ஹி..அனுஷ்கா, அப்புறம்  சந்தானம்
- நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு
- கண் தெரியாவிட்டாலும், நம்பகமான சண்டைக்காட்சிகள்
அப்புறம்….:
- எக்கோ கான்செப்ட் போன்ற பல புதிய விஷயங்கள் இருந்தாலும், படக்குழு எல்லா டிவி பேட்டிகளில் அதையே திரும்பத் திரும்பச் சொல்லி பழைய விஷயமாக்கியது. இவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது.
பார்க்கலாமா? :
-  கண்டிப்பாக பார்க்கலாம்.
- (இது எந்தெந்த படத்துல இருந்தெல்லாம் சுட்டுறுப்பாங்கன்னு ஆராய்ச்சி செய்யாம, படம் பார்க்கிற சராசரி ரசிகனா நீங்க இருந்தா..ரசிக்கலாம்!)

 
-