முதல் படத்தில் வெற்றி பெற்ற இயக்குநர்கள் தனது அடுத்த படத்தை அதைவிட
அதிக முனைப்புடனும், ஊக்கத்துடனும் செய்வார்கள்..! வெற்றி மீண்டும் தொடர
வேண்டும் என்பதற்காக.. இந்த படத்தின் இயக்குநர் பன்னீர்செல்வம் அப்படியே
பல்டியடித்து, இந்த ஒரு படத்தோடு திரையுலகத்தைவிட்டு வாலண்டரி
ரிட்டையர்ட்மெண்ட் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தோடு தனது இரண்டாவதான இந்தப்
படத்தை எடுத்திருக்கிறார்.!
பைத்தியக்காரத்தனமான கதை.. திரைக்கதை, இயக்கம்.. இப்படியொரு படத்தை
எடுத்தால் இந்தக் காலத்தில் தியேட்டர் கேண்டீனில் வேலை பார்ப்பவர்களாவாவது
பார்ப்பார்களா என்று யோசிக்காமலேயே தனக்குத் தோன்றியதையெல்லாம் படமாக
சுருட்டி எடுத்திருக்கிறார் பன்னீர்செல்வம். ஆனாலும் என்னைப் போன்ற
பத்திரிகையாளர்களுக்கு இந்தப் படம் மிக முக்கியமான படம்தான்.. எங்களது
அன்பு அண்ணன் கிருஷ்ணா டாவின்சி நடித்திருக்கும் ஒரே படம் இதுதான்
என்பதால் இது கண்டிப்பாக அந்த வகையில் மட்டுமே சிலருக்கு பாதுகாக்க
வேண்டிய படமாக இருக்கும்.
தான் மிகவும் நேசித்த அப்பாவின் மரணத்தினாலும், தனது அம்மாவின்
பாராமுகத்தினாலும் மனநோயாளியாக இருக்கும் கார்த்திக் என்னும் இளைஞன்,
ஹீரோயின் காயத்ரியை பார்த்தவுடன் காதலிக்கத் துவங்க.. இடையில் அவனது
மனநோயால் 2 கொலைகளை செய்துவிட்டு காதலியையும் கடத்திக் கொண்டு
தப்பியோடுகிறான். பிடிபட்டானா இல்லையா என்பதுதான் கதையெனச் சொல்லப்படுவதன்
முடிவுக் காட்சி..!
முதல் 5 நிமிடத்திலேயே படத்தின் தரம் முடிவாகிவிட்டது.. ஹீரோ,
தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தியின் மகன் என்பதாலேயே அவரை மையமாக
வைத்து படமெடுக்கலாம். தப்பில்லை.. ஆனால் அதற்கொரு நல்ல கதை வேண்டாமா..?
இதில் கதை என்ற ஒன்று எங்கே இருக்கிறது என்பதைத் தேடுவதற்குள் இடைவேளை
வந்துவிட்டது. அதற்குப் பிறகு ஓடிப் போனவனைத் தேடுறாங்கப்பா.. அவ்வளவுதான்
கதையா என்று யோசித்து முடிப்பதற்குள் படமும் முடிந்துவிட்டது..!
ரேணிகுண்டா படத்தை இயக்கியவர்தான் இந்த பன்னீர்செல்வமா என்ற சந்தேகம்
இப்படத்தை பார்க்கும் அனைவருக்கும் நிச்சயம் வரும்.. அந்த அளவுக்கு லாஜிக்
ஓட்டைகள் காட்சிக்கு காட்சி ஏராளம்..!
மனநோயில் பல வகைகளைப் பார்த்திருக்கிறோம். இதில் முற்றிலும் புதுமையாக
எதிரில் பார்க்கும் பூனை, நாய், பாம்பு, மாடு போன்றவைகளை போலவே தானும்
உருமாறிக் கொள்ளும் மனநோயை இன்றைக்குத்தான் என் வாழ்க்கையில்
கேள்விப்படுகிறேன்.. வளர்க கதை இலாகாவின் பங்கு..!
புதுமுக ஹீரோ ஜானி தானும் கஷ்டப்பட்டு படம் பார்ப்பவர்களையும்
அநியாயத்துக்கு கஷ்டப்படுத்தியிருக்கிறார்..! அவ்வப்போது அவர் ரூட் மாறும்
பிராணிகளை போன்று குரல் கொடுக்க அவர் பட்டிருக்கும் கஷ்டத்தை பார்த்தால்,
நாம் கொடுத்த 120 டிக்கெட் கட்டணமே பரவாயில்லை என்று சொல்லி பேசாமல்
எழுந்து வந்துவிடலாம்..! இந்தப் படத்திற்கு.. இந்தக் கதைக்கு.. இது ஓகே..
அடுத்த படத்தில் இவரின் நடிப்பை விமர்சித்துக் கொள்ளலாம்..!
புதுமுக ஹீரோயின் காயத்ரி.. மேக்கப்பே இல்லாமல் நடித்திருக்கிறார்..
சுண்டியிழுக்கும் அழகு இல்லையென்றாலும், ஏதோ ஒரு கவர்ச்சி அவரது முகத்தில்
இருக்கிறது..! இன்னும் 3 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்..
வரட்டும்.. பார்ப்போம்.. (நான்
பேட்டியெடுத்தவர்களில் "அண்ணா" என்று என்னை அழைத்த ஒரே கதாநாயகி இந்த
காயத்ரி மட்டுமே என்பதால், இதற்கு மேல் இந்தப் பொண்ணைப் பத்தி நான்
எதுவும் சொல்ல மாட்டேன்)
வீணாப் போனவர்களின் பட்டியலில் யுவராணியும், ரோகிணியும், கிருஷ்ணா
டாவின்சியும் இணைந்திருக்கிறார்கள். யுவராணியின் கேரக்டர் ஸ்கெட்ச்சே
அப்படித்தான் என்பதால் விட்டுவிடுவோம்.. ரோகிணி-கிருஷ்ணா டாவின்சி
போர்ஷன், கதையின் அடித்தளமே ஆடிப் போகும் அளவுக்கான லாஜிக் மிஸ்டேக்கில்
பவனி வருவதால் இவர்களையும் விட்ருவோம்..
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு படத்தில் ஒரு காட்சியில் வந்தாலும்
இன்றுவரையிலும் மறக்க முடியாத சத்தியேந்திரன், இந்தப் படத்தில் வேறொரு
மனநோயாளியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்..! காதல் வாழ்க.. என்று அவர்
சொல்லும்போதெல்லாம் தியேட்டரில் சிரிப்பலை எழுகிறது.. ஒரு குறும்புக்கார
பத்திரிகையாளர் இயக்குநர் ஒழிக என்றுகூட பதிலுக்குக் கத்தினார்.. தனது
இத்தனை வருட திரையுலக வாழ்க்கையில், இப்போதுதான் முதல் முறையாக கேரக்டர்
ஆர்ட்டிஸ்ட்டாக ஜெயித்திருக்கிறார் சத்தியேந்திரன்..! இனியாவது
நல்லாயிருக்கட்டும்..!
தினேஷ் சார்லஸ் பாஸ்கோ என்பவர் இசையமைத்திருக்கிறார். போடி போடி
பெண்ணோ, உன்னை ஒன்று.. இந்த இரண்டு பாடல்கள் மட்டுமே மீண்டும் கேட்க
வேண்டும் போல உள்ளது.. தனியாக மட்டும்.. படத்துடன் இல்லை. இந்த
இசையமைப்பாளர் பற்றிக் குறிப்பிட வேண்டியது இன்னொன்று இருக்கிறது. இந்தப்
படத்தின் பின்னணி இசையைப் போன்ற ஒரு கொடூரமான இசையை இந்த வருடத்தில்
எந்தப் படத்திலும் நான் இதுவரையில் கேட்டதில்லை.. அவ்வளவு சப்பை..!
ஒளிப்பதிவாளர் மட்டும் தன் பெயரைக் காப்பாற்றிக் கொண்டு இயக்குநரை
நட்டாத்தில் விட்டுவிட்டார். அந்த நோய் எதனால் வந்த்து என்பதைக் கூட
பாதியிலேயே விட்டுவிட்டார்கள்..! ரோகிணியும், கிருஷ்ணாவும் ஏன் ஹீரோவை
காப்பாற்ற இத்தனை மெனக்கெடுகிறார்கள் என்பதற்கான காரணத்தைக் காணோம்..!
அதேபோல் இன்ஸ்பெக்டர் ஜெ.எஸ். ஆளை பார்க்கும் முன்பாகவே ஹீரோவை போட்டுத்
தள்ளிவிட வெறியோடு இருப்பது ஏன் என்பதும் தெரியவில்லை.. ஹீரோ ஒரு மன
நோயாளி என்பதையே புரிந்து கொள்ள முடியாத ஹீரோயினாக காட்டியிருப்பது தோளில்
மீது ஏறி உட்கார்ந்து நம் காதில் பூச்சுற்றும் வேலை..! படத்தின் மிகப்
பெரிய காமெடியே.. போலீஸ் ஜீப்பின் பின்னால் ஹீரோ ஓடி வருவதும், ஜீப்
முன்னால் பறப்பதுமாக வருவதுதான்.. என்னவொரு திரைக்கதை..!? அசரடிக்க
வைத்துவிட்டார்கள்..!
இப்படியெல்லாம் காசை கொட்டி வெட்டியாக செலவழித்து வைப்பதற்கு பதிலாக
ராமராஜன் மாதிரி ஒரு ஹீரோவை உடனடியாகத் தேடிப் பிடித்து கிராமத்தில்
ஆட்டையோ, மாட்டையோ மேய்க்கச் சொல்லி படமெடுத்து வெளியிட்டாலும் புண்ணியம்
கிடைக்கும்..!
இப்போதுவரையிலும் கதை, திரைக்கதைக்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறோம்
என்று இயக்குநர் சொல்லிக் கொண்டிருக்கிறாராம். இன்னும் கொஞ்ச நாளில்
“எனக்கும் கதை பிடிக்கலதான்.. தயாரிப்பாளரின் மகனுக்காக சில விட்டுக்
கொடுத்தல்களைச் செய்தேன். அதுல என்னோட பங்களிப்பு ஏதுமில்லை.. அதுனால
அந்தப் படம் பெயிலியர் ஆயிருச்சு...” என்று இதே இயக்குநர்
பேட்டியளிக்கத்தான் போகிறார்..! அதையும் நாம பார்க்கத்தான் போறோம்..!