>

எலி கடித்து குழந்தை முகம் சிதைவு? : 9 மருத்துவ ஊழியர்கள் தற்காலிகப் பணிநீக்கம்


கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை 
சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில், பிறந்து சில நாட்களில் இறந்த ஒரு குழந்தையின் முகத்தில் எலி கடித்ததாகக்கூறி அக்குழந்தையின் பெற்றோர் மருத்துவமனையில் இருந்து குழந்தையின் உடலை வாங்க மறுத்த சம்பவத்தில், கஸ்தூரிபாய் மருத்துவமனையின் இரண்டு மருத்துவர் உட்பட 9 மருத்துவப் பணியாளர்களை தமிழக அரசு தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.


மருத்துவமனையில் இறந்த ஒருவரின் சடலத்தை, பிரேதப் பரிசோதனை தேவையில்லாத சமயங்களில், உடனடியாக உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற விதிமுறையைப் பின்பற்றாத காரணத்தினாலும், இறந்த குழந்தையின் சடலம் சவக்கிடங்குக்குள் பாதுகாப்பாக வைக்கப்படாத காரணத்தினாலும் இவ்வூழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக சுகாதார அமைச்சரும் சுகாதாரத்துறை அரசு செயலரும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை சென்று நடத்திய ஆய்வில், குழந்தை இறந்த பிறகே அதன் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்தக் காயம் குழந்தைக்கு இருந்த உடல்நலக் கோளாறுகளால் ஏற்பட்டதா அல்லது குழந்தையின் உடலை எலி கடித்ததால் ஏற்பட்டதா என்பதை அறியும் பொருட்டு பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் திசு பரிசோதனை போன்றவை நடத்தப்படவுள்ளதாக முதல்வரின் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்கள் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
மருத்துவமனை வளாகங்களில் நாய், பூனை, எலி முதலியவை வராமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க இக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

 
-