அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில், பராக் ஒபாமாவுக்கு எதிரான ஆவணப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
இந்த ஆவணப் படத்தை அமெரிக்க வாழ் இந்தியர் தயாரித்துள்ளார். “2016ஆம் ஆண்டில் ஒபாமாவின் அமெரிக்கா” என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தைக் காண இரண்டு கட்சியினரும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த ஆவணப் படம் அமெரிக்காவில் 1,800 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்த ஆவணப் படம் மிகச் சிறந்த 10 திரைப்படங்களுள் 7-வது இடத்தைப் பிடித்தது. இதன் மூலம் வசூலான தொகை 93 கோடி டொலராகும்.
இந்த ஆவணப் படம் பார்ப்பவர்களை கதையுடன் ஒன்றிப் போகச் செய்கிறது. உலகின் மிகவும் வலுவான ஜனாதிபதி மாளிகைக்குச் செல்லும் ஒருவர், அவரது கொள்கையால் அடுத்த நான்கு ஆண்டுகளில் எத்தகைய மாற்றங்களைச் செய்யப் போகிறார் என்பதை விவரிக்கிறது.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஒபாமா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் 2016ஆம் ஆண்டில் அமெரிக்கா என்னவாக இருக்கும்? என்ற கேள்வியை எழுப்புகிறது.
நம்பிக்கையும் மாற்றமும் எவ்விதம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு அது தவறான வழிகாட்டுதலுக்கு தள்ளப்பட்டதாக ஆவணப்படம் சித்தரிக்கிறது. மன்னராட்சி முறையிலிருந்து மாறி அமெரிக்கா சுதந்திரமடைந்தது வரை ஒவ்வொரு பகுதியாக சித்தரிக்கிறது.
மும்பையில் பிறந்து அமெரிக்காவில் வாழும் இயக்குநர் தினேஷ் டி' சௌசா எழுதிய “ஒபாமாவின் மூர்க்கத்தனத்தின் வேர்” என்ற நூலை மையமாகக் கொண்டு இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நூல் மிக அதிக அளவில் விற்பனையான நூல் என்பது குறிப்பிடத்தக்கது.