
நடிகை : தன்வீ
இயக்குனர் : பி.வி.பிரசாத்
இசை : டேனியல்
ஓளிப்பதிவு : விஜய் மில்டன்
ஒரு பாழடைந்த தொழிற்சாலையில் தலைகீழாக தொங்க விடப்பட்ட நிலையில் நாயகன் சீனு, தன் வாழ்க்கையின் முற்பகுதியை சொல்வது போல் கதை துவங்குகிறது.
சலவைத் தொழில் செய்பவராக சீனு. பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வி்ட்டு கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பம் வாங்க செல்கிறார். அப்பொழுது நாயகி மித்ராவும் விண்ணப்பம் வாங்க கல்லூரிக்கு வருகிறார்.
மித்ராவை சீனு பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார். மித்ராவின் நினைவிலேயே இருக்கும் சீனு தனது சலவை துணிகளில் மித்ரா அணிந்த ஆடையை பார்க்கிறார். ஆடையை வைத்து மித்ராவின் வீட்டையும் தெரிந்து கொள்கிறார்.
மித்ரா கல்லூரியில் அவளுடன் படிக்கும் குடும்ப நண்பன் ஷாமுடன் தனியாக தங்கியிருப்பதை அறிகிறான். சீனு, மித்ரா, ஷாம் மூவரும் கல்லூரியில் ஒரே பாடப்பிரிவில் சேர்கிறார்கள்.
கல்லூரி முடிந்து வீ்ட்டிற்கு செல்லும்போது சீனுவும் உங்களுடன் வருகிறேன் எனக்கூற, காரில் ஏற்றிக்கொள்கிறார்கள். வழியில் இவர்கள் சென்ற கார் ஆட்டோ மீது மோதுகிறது.
காயம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஆட்களை கூட்டி வருகிறார். இதனால் தான்தான் காரை ஓட்டி வந்ததாக சொல்லி சீனு தர்ம அடி வாங்குகிறான். இதனால் மித்ராவும் ஷாமுவும் சீனுவிடம் நெருக்கமாக நட்பு கொள்கின்றனர்.
ஷாம் பிறந்த நாளுக்கு மித்ரா வீட்டுக்கு சீனு வருகிறான். அங்கு ஷாமும் சீனுவும் மது அருந்துகிறார்கள். போதையில் சீனு மித்ராவின் அறைக்கு செல்கிறான். அங்கு அவள் குளிப்பதை பார்க்கிறான். இதை ஷாம் பார்த்து விடுகிறான்.
இதுகுறித்து மறுநாள் கல்லூரியில் ஷாம், சீனுவிடையே வாக்குவாதம் நடக்கிறது. அது சண்டையாக மாறுகிறது. இதைக்கண்ட மித்ரா, இருவரும் நண்பர்களாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என இரண்டு நாள் கெடு விதிக்கிறாள்.
ஷாமை சமாதானப்படுத்துவதற்காக சீனு அவனது வீட்டுக்குச் செல்கிறான். அங்கு இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. சீனு, ஷாமிடம் மித்ராவை நான் மிகவும் காதலிக்கிறேன். இதனால்தான் இந்த கல்லூரியில் சேர்ந்தேன் என்று சொல்லி, எங்களை நீதான் சேர்த்து வைக்க வேண்டும் என கெஞ்சுகிறான்.
ஷாம் இது ஒருநாளும் நடக்காது என சொல்ல, அவர்களுக்குள் ஏற்படும் மோதலில் சீனு, ஷாமை அடித்துக் கொல்கிறான். இது வெளியே தெரிந்தால் மித்ராவை இழக்க நேரிடும் என்பதால் ஷாமின் வீட்டின் படுக்கறையிலேயே பிணத்தை புதைத்து விடுகிறான்.
ஷாம் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு பல நாட்கள் காணாமல் போய்விடுவான் என்பதால் மித்ரா அவனை தேடவில்லை. நாட்கள் செல்ல செல்ல அவன் திரும்பி வராதது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கிறாள்.
இந்நிலையில் மித்ரா சீனுவின் மீது காதல் வயப்படுகிறாள். தன் மீது காதல் கொள்ளும் மித்ராவிற்காக சீனு எதையும் செய்ய துணிகிறான்.
ஷாமைத் தேடி அலையும் போலீசார் சீனுவின் மீது சந்தேகம் கொள்கிறார்கள். அவனைக் கண்காணிக்கவும் தொடங்குகிறார்கள். இதையறிந்த சீனு இதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறான். ஆனால் போலீசார் பொறி வைத்து அவனை கைது செய்கின்றனர்.
கொலை வழக்கில் இருந்து சீனுவை தப்புவிக்க உயர் போலீஸ் அதிகாரி ரூ. 50 லட்சம் லஞ்சம் கேட்கிறார். அந்த பணத்தை மித்ராவிடமிருந்தே வாங்கிக் கொடுக்கிறான். மித்ராவும் ஏன் எதற்கு என கேட்காமால் கேட்ட பணத்தை கொடுத்து விடுகிறார்.
அதிகாரிக்கு பணம் கொடுத்து கொலை வழக்கில் இருந்து சீனு தப்பித்தானா? மித்ராவுடன் இணைந்தானா? என்பது மீதிக்கதை.
சீனுவாக வரும் விஷ்வா சலவைத் தொழிலாளியாக வரும்போதும், ஏழை மாணவனாக கல்லூரியில் சேர்ந்து படிக்கும்போதும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
மித்ராவாக வரும் தன்வீ ரொம்ப அழகு. கல்லூரியிலும், வீட்டிலும் இவரது நடை, உடை, பாவனைகள் நம்மை கற்பனை உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது. தன்வீயின் நண்பனாக இர்பான், சிறிது நேரமே வந்தாலும் முத்திரை பதிக்கிறார்.
பல படங்களில் வில்லனாக வலம் வந்த ரவிகாளே இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் வில்லனாக நம்மை மிரட்டியிருக்கிறார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு விஜய் மில்டன். இவரே வசனமும் எழுதியிருக்கிறார். டேனியல் இசையில் ஹரீஷ் ராகவேந்திரா பாடிய ‘ஒரு பார்வையிலே’ பாடலும், கார்த்திக் பாடிய ‘என் காதல் நீதானே’ பாடலும் மனசுக்கு இதமாய் இருக்கின்றன.
‘காதலில் விழுந்தேன்’ படத்தை எடுத்த பி.வி.பிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார். பரபரப்பான திரைக்கதை, சஸ்பென்ஸ் என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘எப்படி மனசுக்குள் வந்தாய்’ மனசை தொட்டுச் செல்கிறது.