அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து 5வது முறையாக விண்வெளியில் நடந்து பணிகளை செய்தார். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவானது ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து சர்வதேச ஆராய்ச்சி மையத்தை விண்வெளியில் அமைத்துள்ளது. அங்கு தங்கி சுனிதா ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் சுனிதா, சக விண்வெளி வீரரான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அகிஹிகோ ஹாஸ்ஹைடு டன் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இந்திய நேரப்படி மாலை 5.46க்கு விண்வெளியில் நடந்து பணிகளை மேற்கொண்டார். மீண்டும் நேற்று அதிகாலை 2.03 நிமிடத்துக்கு விண்வெளி மையத்துக்கு திரும்பினார். அவர்கள் 8 மணி நேரம் 17 நிமிடங்கள் விண்வெளியில் நடந்தனர். ஒரே சமயத்தில் நீண்ட நேரம் விண்வெளியில் நடந்து அமெரிக்காவின் சூசன் ஹெல்ம்ஸ் மற்றும் ஜேம்ஸ் வாஸ் ஆகியோர் 2001ல் சாதனை படைத்தனர். இவர்கள் 8 மணி 56 நிமிடங்கள் விண்வெளியில் நடந்தனர்.
பழுதடைந்த மின்சார விநியோக கருவியை இவர்கள் மாற்ற முயற்சி மேற்கொண்டனர். ஆனால், சிரமம் இருந்ததால் அந்த கருவியை பொருத்த முடியவில்லை. முன்னதாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யா விரைவில் கொண்ட வரவுள்ள ஆய்வகத்துக்கு தேவையான 2 மின்சார கேபிள்களை இணைக்கும் பணியை சுனிதா வெற்றிகரமாக முடித்தார். 3வதாக ஒரு கேமராவை மாற்றும் பணியும் முடிவடையவில்லை.