அமெரிக்காவில் போதையில் மிதந்த ஆசாமி, கோழிப் பண்ணைக்குள் புகுந்து மின் இணைப்பை துண்டித்ததில் 70 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் பரிதாபமாக இறந்தன.
கலிபோர்னியாவின் டெல்மார் நகரில் கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு வசிக்கும் ஜோசுவா ஷெல்டன்(வயது 21) என்ற வாலிபர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடும் போதையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
கோழிப் பண்ணையை பார்த்தவுடன் அத்துமீறி உள்ளே புகுந்து, அங்கிருந்த மின் இணைப்புகளை துண்டித்தார். இதனால் கூலிங் பேன் நின்று விட்டது. தண்ணீர், உணவு சப்ளையும் நின்று விட்டது.
வெப்பம் தாங்க முடியாமல் கோழிக் குஞ்சுகள் புழுங்கின. பின்னர் அங்கும் இங்கும் போதையில் தள்ளாடிய ஜோசுவா, மீண்டும் வெளியில் வந்தார்.
கோழிப் பண்ணைக்குள் இருந்து அவர் வெளியில் செல்வதை பார்த்த சிலர் உடனடியாக பொலிசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்த பார்த்த போது, 70 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் இறந்து கிடந்தன.
100 கோழிக் குஞ்சுகள் மட்டும் எப்படியோ உயிருடன் இருந்தன. இதையடுத்து ஜோசுவாவை பொலிசார் கைது செய்தனர்.
அவர் மீது கொள்ளை முயற்சி, அத்துமீறி நுழைதல், படுகொலை போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே இரவில் 70 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் சாகடிக்கப்பட்ட சம்பவம் கலிபோர்னியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.