தன்னை சச்சினுடன் ஒப்பிடுவதா? அது பொருத்தமற்றது என இந்தியக் கிரிக்கெட் அணியின் அதிரடி இளம்வீரர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் 3000 ஓட்டங்களை கடந்துள்ளதுடன், இந்த ஆண்டு இதுவரை 5 சதம் அடித்துள்ளார்.
இதனால், சச்சினின் 100 சத சாதனையை இவர் முறியடிக்கலாம் என இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந் நிலையில், தன்னை சச்சினுடன் ஒப்பிடுவது குறித்து தான் பெருமை கொள்வதாகவும், ஆனால் அவருடன் ஒப்பிடுவது என்பது பொருத்தமற்றது எனவும் கோஹ்லி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
கிரிக்கெட்டில் எனது கடவுள் சச்சின். அவரை நான் வணங்குகிறேன். சர்வதேச போட்டிகளில் அவர் 100 சதம் அடித்துள்ளார். இது மிகப்பெரிய சாதனை. அந்த இலக்கை எந்த வீரராலும், எப்போதும் அடைய முடியாது.
இப்போது, எனது திறமையை பார்த்து எல்லோரும் சச்சினுடன் ஒப்பிட்டு பேசத் துவங்கியுள்ளனர். இது எனக்கு கிடைத்த பாக்கியம். அதேநேரம் அவருடன் என்னை ஒப்பிட்டு பேச வேண்டாம்.
அவரது சாதனை குறித்து எதுவும் நினைப்பதில்லை. ஏனெனில், இது தேவையில்லாத நெருக்கடியையே ஏற்படுத்தும். இதுபோன்ற விஷயங்களில் கவனத்தை சிதறவிடாமல், தொடர்ந்து போட்டிகளில் அசத்த விரும்புகிறேன். என்றார்.