குடாநாட்டின் அரச சிறுவர் இல்லத்தின்
பராமரிப்பில் இருந்த பச்சிளம் குழந்தை நேற்று
உயிரிழந்துள்ளது. கிளிநொச்சியில் பிறந்த ஜெயலக்சுமி என்று பெயரிடப்பட்ட
மூன்றரை வயதுக் குழந்தையே உயிரிழந்தது என்று யாழ். போதனா வைத்தியசாலை
தெரிவித்தது.
கைதடியில் உள்ள அரச சிறுவர் இல்லத்தில்
குழந்தைகளைப் பராமரிப்பதற்குப் போதிய ஆளணி வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு
எழுப்பப்பட்டு வந்த நிலையில் இந்தக் குழந்தை இறந்துள்ளது.
குழந்தை நோய்வாய்ப்பட்டே இறந்து போனதாக
யாழ். போதனா வைத்தியசாலை தெரிவித்தது. "குழந்தை ஒரு மாதத்துக்கு முன்னரே
சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து
குழந்தை ஒப்படைக்கப்பட்டபோதே, அதன் மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால்
உயிரிழக்கக்கூடும் என்ற எச்சரிக்கையும் தெரிவிக்கப்பட்டிருந்தது'' என்று
வடமாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்கள ஆணையாளர் ரி.லிஸ்பரூபன்
தெரிவித்தார்.
குழந்தையை கொழும்புக்கு எடுத்துச்
சென்று சிகிச்சை அளித்தபோதும் குணப்படுத்த முடிந்திருக்கவில்லை என்றும்
அவர் கூறினார். சில மாதங்களுக்கு முன்னர் இதே அரச சிறுவர் இல்லத்தில்
இருந்த குழந்தை ஒன்று உயிரிழந்திருந்தது. அதனைத் தொடர்ந்து இல்லம்
தற்காலிகமாக மூடப்பட்டு அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ்
மறுசீரமைக்கப்பட்டுத் திறக்கப்பட்டது.
அப்படி இருந்த போதும் இல்லத்தில
பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்ப பராமரிப்பாளர்கள் இல்லை என்று
கூறப்படுகின்றது. தற்போது இல்லத்தில் 31 குழந்தைகள் உள்ளன. இவற்றைப்
பராமரிக்க 7 பராமரிப்பாளர்கள் உள்ளனர். இவர்களில் இருவர் மட்டுமே நிரந்தரப்
பணியாளர்கள்.
இரவு பகல் என மாறி மாறி வரும் கடமை
என்பதால் ஒரு நேரத்தில் ஆகக் கூடுதலாக 3 பேர் மட்டுமே கடமையில்
இருக்கின்றனர். 10 பிள்ளைகளுக்கு ஒரு தாய் என்ற ரீதியில் பராமரிப்பைச்
செய்வது சாத்தியமற்றது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
"திணைக்கள விதிகளுக்கு அமைய 5
பிள்ளைகளுக்கு ஒரு பராமரிப்புத் தாய் இருக்க வேண்டும். இப்போதும் அவ்வாறே
உள்ளது. இருப்பினும் ஆளணியை அதிகரிப்பதற்குக் கோரியுள்ளோம்'' என்று
ஆணையாளர் ரி.லிஸ்பரூபன் தெரிவித்தார்.