திரையுலகில் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு திரையிசை சக்கரவர்த்தி என்ற புதிய பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் எம்.எஸ்.விஸ்வநாதனும், டி.கே.ராமமூர்த்தியும் மெல்லிசை மன்னர்களாகத் திகழ்ந்தவர்கள்.
இவர்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் 500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
இவர் இசையமைத்து பாடிய பாடல்கள் இன்றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
கடந்த 1963ம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி கல்ச்சுரல் அகாடமியில் நடந்த விழாவில்தான் முதல் முறையாக மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் இந்த இசை மன்னர்களுக்கு வழங்கப்பட்டது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் இவர்களுக்கு மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டத்தை வழங்கினார்.
அன்று முதல் இவர்கள் இருவரும் மெல்லிசை மன்னர் என்றும் மெல்லிசை மன்னர்கள் என்றும் அழைக்கப்படலாயினர்.
இந்நிலையில் ஜெயா டிவியின் சார்பில் அதன் நிறுவனர் முன்னாள் நடிகையும் தற்போதைய தமிழக முதல்வருமான ஜெயலலிதா எம்.எஸ்.விக்கு திரையிசை சக்கரவர்த்தி என்ற புதிய பட்டத்தை வழங்கியுள்ளார்.
இதற்கான விழாவில் ரஜினி காந்த், கமல் ஹாசன், இசைஞானி இளைய ராஜா, இயக்குனர் கே.பாலச்சந்தர், தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பட்டம் எம்.எஸ்விக்கு வழங்குவதற்கு முன்பாக ஜெயா டிவி சார்பில் எம்.எஸ்.விக்கு எந்தப் பட்டம் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று மக்களிடையே கடந்த 15 நாட்களாக ஊர் ஊராகப் போய் வாக்கெடுப்பு நடத்தினார்கள்.
அந்த வாக்கெடுப்பில் பலரும் பல பட்டங்களைப் பரிந்துரைத்துள்ளனர். அதில் இந்த திரையிசை சக்கரவர்த்தி என்ற பட்டத்துக்கு அதிக ஆதரவு கிடைத்ததாம்.
இதனால் அந்தப் பட்டத்தை நேற்று நடந்த விழாவில் ஜெயலலிதா மூலம் ஜெயா டிவி நிர்வாகத்தார் கொடுத்துள்ளனர்.