
இந்த ஆண்டு ஜெனீவாவில் நடந்த மனித உரிமை மாநாட்டில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்த விடையம் யாவரும் அறிந்ததே.
இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பல மாதங்கள் ஆகின்றது. அத்தோடு வரும் மார்ச் மாதம் 2013ல் மீண்டும் ஐநாவின் மனித உரிமைக் கவுன்சில் கூடவுள்ளது. வரும் மார்ச் மாதத்துக்கு முன்னதாக இலங்கை அரசு தனது போக்கில் மாற்றத்தை காண்பிக்காவிட்டால், அடுத்து என்ன செய்வது என்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றின் நாட்டுப் பிரதிநிதிகள் ஆராயத் தொடங்கியுள்ளனர் என்ற செய்திகள் தற்போது கசிய ஆரம்பித்துள்ளது.
இலங்கை அரசானது அமெரிக்கா முன்வைத்த கோரிக்கைகளை முன் நகர்த்தாமல் இழுத்தடித்தால், அன் நாட்டு அதிகாரிகள் மீது பயணத் தடையைக் கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் முடிவு எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
இலங்கையில் லக்ஷ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டவேளை, அதற்கு புலிகளே காரணம் எனக்கூறி, ஐரோப்பிய ஒன்றியம் புலிகளின் பிரதிநிதிகளுக்கு பயணத்தடை விதித்தது. இதனால் பேச்சுவார்த்தைகளில் கூட பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டது. இதே போன்றதொரு பிரயாணத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவரும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகள், இலங்கை மனித உரிமை விடையத்தில் தற்போது சிறிதளவேனும் கவனஞ்செலுத்தி வருகிறது என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.