திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி தயாரிப்பில் விறுவிறுவென உருவாகி வரும் படம் கும்கி.
மைனா வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரபு சாலமன் இப்படத்தை இயக்கி வருகின்றார்.
படத்தின் நாயகனாக இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிக்கிறார். நாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.
ஏற்கனவே இசை மற்றும் டிரைலர் வெளி வந்துள்ள நிலையில் இப்படத்திற்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இருப்பினும் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளை உருவாக்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகின்றது.
பொதுவாக க்ளைமேக்ஸ் காட்சிகள் நாயகன், நாயகி, வில்லன் ஆகியோரை மையமாக வைத்தே அமையும்.
ஆனால் இப்படத்தில் இரண்டு யானைகள் சண்டைபோடும் காட்சிகளை க்ளைமேக்ஸ் காட்சிகளாக உருவாக்கி வருகின்றார்கள்.
இதற்கான க்ராபிக்ஸ் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றார்கள்.
இந்த க்ளைமேக்ஸ் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டதும் படத்திற்கான வெளியீட்டு திகதி உறுதியாக அறிவிக்கப்படுமென தெரிகிறது.