>

ஹெட்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த இளைஞன் செவிப்பறை வெடித்துப் பரிதாபப் பலி!!

ஹெட்போனில் பாடல் கேட்டுக் கொண்டிருந்த இளைஞனின் செவிப்பறை வெடித்ததனால் குறித்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் கல்முனை, நற்பிட்டிமுனைக் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.
ஹெட்போனில் பாடல் கேட்டவாறு நித்திரைக்குச் சென்ற இளைஞனே இவ்வாறு செவிப்பறை வெடித்து இரு காதுகளிலும் இரத்தம் வந்த நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது:-

நேற்று முன்நாளிரவு புதன்கிழமை குறித்த இளைஞன் தனது லப்டெப்பில் (மடிக் கணனி) ஹெட்போனைப் பொருத்தி காதில் மாட்டிக் கொண்டு பாடல் கேட்டுள்ளார். அதன் பின் ஹெட்போனை கழட்டாது உறக்கத்திற்குச் சென்றுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை காலையில் உறவினர்கள் இளைஞனின் அறையைப் பார்த்தபோது இரு காதிலும் இரத்தம் வந்த நிலையில் உயிரிழந்து கிடந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை அன்றிரவு இரவு வேளையில் பல தடவை மின்சாரம் தடைப்பட்டு வந்துள்ளது. இதனால் இளைஞனின் செவிப்பறை வெடித்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் அனர்த்தத்தில் உயிரிழந்தவர் நற்பிட்டிமுனை பிரதான வீதியைச் சேர்ந்த அகமட் லெப்பை ரிப்னாஸ் (24 வயது) என்பவராவார்.

இவர் கல்முனை கொமர்ஷல் வங்கியில் காப்புறுதி உதவியாளராக கடமை புரிபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இளைஞர்கள் மத்தியில் எந்த நேரமும் ஹெட்போனைக் காதில் மாட்டிக் கொண்டு பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.

 
-